அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Monday, September 15, 2008

இரத்தம் குடிக்கிற ஆண்குறி

--------------------------தீபச்செல்வன்
-------------------------------------------------
நேற்றிரவு முழுக்க
மிருகம் ஒன்று
உன்னை புணர்ந்து கொண்டிருந்தது
குருதி சிந்துகிற
வார்த்தைகள்
காய்ந்து விடுகின்றன
குறிகள் அற்றுப்போகட்டும்.

நான் என்ன செய்கிறேன்?

நாம் புணர்வதறகாய்த்தான்
நெருங்கியிருந்தோமா?
நெருங்கியிருந்ததினால் புணர்ந்தோமா?
முடிகளை கோதும் பொழுதும்
கன்னங்களை சுவைக்கும் பொழுதும்
கைகளை வருடிபொழுதும்
முத்தமிட்ட பொழுதும்
குழந்தைகளாய் இருந்தோம்.

நீ என்ன கேட்கிறாய்?

கடைசியில்
இரவு குருதியில் முடிந்து போனது
வலி மிகுந்த சொற்களில் முடிந்துபோனது
உன் கன்னங்கள்
துடித்துக்கொண்டிருந்தபொழுது
நான் ஒரு பிணமாகி நின்றேன்.

புணராமலே இருந்திருக்கலாம்.

குறிகள் இருந்ததினால்தான்
புணர்ந்தேமா?
புணர்வதற்காய் குறிகள் இருந்தனவா?
குறிகள் இருந்ததினால்த்தான்
நெருங்கியிருந்தோமா?
குறிகள் இல்லாதிருந்தால்
எப்படி புணர்ந்திருப்போம்?
எப்படி நெருங்கியிருந்திருப்பொம்.?

புல்வெளிகளை
மூடுகிற பற்றைகளில்
உலருகின்றன பகல்ச்சொற்கள்
விந்து வடியும்
கதிரைகளை அறுவருத்து
வீசி விடுகிறது முற்றம்.

விஷத்தைப்போல
உன்மீது விந்து வடிகிற பொழுது
நீ சொன்னதைப்போல
நஞ்சுக்கனியுடன்
ஒரு பாம்பாய் நின்றேன்.

உன் கன்னங்களை தொலைத்துவிட்டு
உன் பார்வைகளை தொலைத்துவிட்டு
முத்தங்களை இழந்துவிட்டு
ஒரு மிருகமாய் விலத்திச் செல்கிறேன்.

உன் இரத்தத்தை குடித்துவிடுகிறது என் ஆண்குறி
படுக்கையறை
ஒரு குகையைப்போலிருக்கிறது.
---------------------------------------------------

போர்வை


--------------------------தீபச்செல்வன்

நீளம் குறைந்த
இரவிடம்
போர்வை இல்லை
என்னை
இழுத்துக்கொள்ளும்
போர்வையிடம்
என் முகம்
தேடியலைகிறேன்.

வெக்கை படிந்த
போர்வையில்
வடியும்
கோடைத்துளிகளை
கட்டிலிருந்து
அள்ளி குடிக்கிறது
தலையணை.

கால்களை
கைகளை
தலையினை
தின்ற போர்வையிடம்
எஞ்சிக்கிடக்கிறது முண்டம்.

அலுமாரித் திறப்பு

-------------------------தீபச்செல்வன்

----------------------------------------------
நேற்று யாரோ
வானொலியை திருடிக்கொண்டு
போய்விட்டார்கள்
ஒரு பாடல் மட்டும்
மேசையில் கிடந்தது
செய்திகள் லாச்சிகளில் கிடந்தன
கவிதைப்புத்தகங்களை
அலுமாரியில்
வைத்து பூட்டிவிட
புதிய வானொலி
பூட்டிய அலுமாரியில்
ஒலிக்கிறது
பழைய சேட்டையும்
ஜீன்ஸ்சையும்
போர்வையையும்
உள்ளே வைத்து பூட்டிவிட்டு
வெளியே போகிறேன்
அறை
திறந்தே கிடக்கிறது
ஒரு தண்ணீர்க்போப்பை
உடைந்துவிட
இரண்டு போப்பைகளை
வாங்கி வருகிறோம்
இன்று
அலுமாரியின் திறப்பு
தொலைந்துவிட
அறைக்கதவு
பூட்டப்பட்டிருக்கிறது.
---------------------------------