--------------------------தீபச்செல்வன்-------------------------------------
நண்பனே வா ஒன்றாய்
சாப்பிடுவோம்
உணவுக்கோப்பையிலிருந்து
விரிகின்றன நமது சொற்கள்.
நேற்றைய இரவு
எனதும் உனதுமான கண்ணீரில்
நனைந்து கிடந்தது
மாடியிலிருக்கும்
நமது அறையிலிருந்து
நீயும் நானும்
பருகிய தேனீர்போப்பைகள்
கீழே விழுந்துபோயின
உடைந்துவிடவில்லை
வா..படியிறங்கி
எடுத்து வருவோம்.
தெருவும் எனக்கு
பதுங்குகுழியாகியபொழுது
நமது அறையே
வானம் நிரம்பிய வெளியாகியிருந்தது
எனது நம்பிக்கையின்
முகத்தோடிருந்தாய்
நீ எனதருகில் படுத்திருந்தபோது
இரவின் பற்கள்
கரைந்து போனது.
நேற்றைய கண்ணீரில்
இன்று ஏதோ சில பூக்கள் பூத்திருக்கின்றன
நீயும் நானும் பருகாது விட்டு
சூடாறிய தேனீரில்
தாமரை மலருகிறது
எல்லாவற்றையும் பேசிய பிறகு
நெருப்பு அணைந்துவிட்டது.
நண்பனே மறுபடியும்
பேசுவோம்
காற்று ஜன்னலை திறந்து
உள் நுழைகிறது
மிகவும் ஆறுதலான இரவு வருகிறது.
என்னைப்போலவே
பயங்கர உலகத்திடமிருந்து
தப்பிய சூரியன்
நாம் தங்கியிருக்கும்
அறையில் வந்திருக்கிறது.
எந்தக்கோபமும் தெரியவில்லை
மறுபடியும்
இந்தக்கவிதையை
வா....வாசித்துப்பார்ப்போம்.
----------------------------------------------------
--------------------------தீபச்செல்வன் ---------------------------------
எதாவது பேசிவிட்டுப்போ.
நிலவு தள்ளிப்போகிற
இராத்திரியில்
லட்சம் தனிமைகளில்
துடிக்கிறேன்
சாதுவான உனது
மௌனத்தில
ஆயிரம் முகங்கள் விரிகின்றன.
உன்னை நிரப்பி
வைத்திருந்த எனது பாடலில்
வழிகிறது
நீ இல்லாத கண்ணீர்.
நாம் பேசிக்கொண்டிருந்தபொழுது
வானம் வெளித்திருந்தது.
என்னைப்போலவே
கறுப்பாய் கிடக்கிறது வானம்
காற்றில்
மீட்கப்போன உனது
சொற்களை
தேடியலைந்து தோற்றுக்கிடக்கிறது
என் தொலைபேசி.
நிலவு குறைந்து விட்டது.
மீதியில் வடிகிறது நமது பிரிவு
நீயும் நானும்
முகங்களை மறைத்து
கடந்து போகிற
தெருவில்
நமது கால்களுக்குள்
மிதிபடுகின்றன
நமது காதலின் சொற்கள்.
முற்றி விளைந்த
இருள் மரத்தின் கொப்பில்
நான் ஏறியிருந்தபோது
உடைந்து விழுகிறது
கொப்பு
இரவுக் கிணற்றில்
கயிறாய் வந்து
உக்கி அறுகிறது உன் மௌனம்.
நிலவு இன்னும் குறைகிறது.
நீ வாசிக்காத
எனது கவிதையும்
செத்துக் கிடக்கிறது
சூரியன் இல்லாத காலையில்...........
--------------------------------------------
--------------------------தீபச்செல்வன்ஆள்களற்ற தொலைபேசி
நமது மொழியில் ஏதோ
பேசுகின்றன
நீயும் நானும் பேசுவது
கம்பிகளின் வழியாய்
பாடலாக வழிகிறது
நேற்று நீ பேசிவிட்டுப்போக
நாள் முழுக்க
கொட்டிக்கொண்டிருந்தது
உனது சொற்கள்
உனது கண்களும்கூட
கம்பிகளின் ஊடே
பேசிக்கொண்டிருந்தது
தொலைபேசியின் ஊடாக
நமது குரல்கள்
இணைந்துகிடக்கிற
காற்றின் வெளியில்
நீயும் நானும்
எங்கிருக்கிறோம்
எனது கண்கள் கரைந்து விட
உனது முகம்
நிரம்பிவிடுகிறது
நமது இருதயங்களை சிலுவையில்
அறைகிறது
நீ இல்லாத நிமிடத்தின் ஒரு துளி
நேற்று
நமது உரையாடலை
அறுத்த வேகமான காற்று
இன்று
என் தனிமைமீது
உன் சொற்களால்
பேசிக்கொண்டிருக்கிறது
காற்றில்
கலந்திருந்தன நமது சொற்கள்
நாம்
இன்னும் பேசியபடியிருப்போம்
காற்று நமதருகில் வீசுகிறது
நீ பேசாத
தொலைபேசி
கையிலிருந்து தவறி வீழ்கிறது.
-------------------------------------------------
--------------------------தீபச்செல்வன்
நீ பேசாது போன பின்னேரம்
எனது சொற்கள் செத்துக் கிடந்தன
தூரத்தில் போனபிறகாவது
திரும்பிப்பார்ப்பாய்
என பார்ர்த்துக்கொண்டிருந்தேன்
உனது உருவம்
புள்ளியாய் சிறுத்து
கரைந்துவிட
எனக்குள்
நீ நிரம்பியயிருந்தாய்
என்னதான் பேசுவாய்
நான்தான்
என்ன கேட்கப்போகிறேன்
நெருங்கிவரும் பொழுது
தவிக்கிற நமது இருதயங்கள்
எப்பொழுது வெளித்தெரியும்
நீயும் நானும்
சொல்ல முடியாத உணர்வால்
துடிக்கிறதை
நிலவு பார்க்கிறது
பிரிந்ததுமில்லை
சேர்ந்ததுமில்லை
யாருக்கம் தெரியாது
நாமும் அறியாமலிருந்தோம்
ஒரு நாள் பின்னேரம்
உனது வீட்டில்
நாம் அருந்திய
தேனீர்க் கோப்பைகளினுள்
இணைந்து கிடந்தன
நமது இருதங்கள்.
---------------------------------------------------