அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Thursday, July 31, 2008

சாத்தான்கள்

--------------------------தீபச்செல்வன்

-------------------------------------
குருதியில் கிடக்கிற
உணவுக்கோப்பையில்
உனது
கடைசி வார்த்தை
குறை உயிருடன்
துடிக்கிறது
எல்லாமே மாறி விடுகிறது
எனது
கோப்பையில்
கிடக்கும்
சமைத்த மீன்கள்
நீந்துகின்றன
பேசாமலிருக்கிறோம்
உலகம்
இறுகிவிட
மனம் சுடலையாகிறது
நெருக்கம்
பற்றிய உரையாடல்களை
நீ
புதைத்து விடுகிறாய்
என்னால்
குழியில் புதைய முடியவில்லை
நீயும் நானும்
ஒருவருக்கொருவர்
சாத்தான்களாகிவிட்டோம்.
---------------------------------------------

Monday, July 28, 2008

முறிந்த சிகரட்

--------------------------தீபச்செல்வன்

`````````````````````````````````````````````````
நான் உன்னிடமிருந்து
எழுத முடியாத
கவிதையாய்
விளக்கின் அடியில்
எரிந்து கிடக்கிறேன்
வீட்டை
இரவு குடித்துவிட
இரண்டு மிருங்களாகி
தனித்திருந்து
சண்டை செய்கிறோம்
பழுதாகிப் போய்விட்ட
நமது
இரவுணவுகளை
வேறு வேறாய் ஒதுங்கியிருந்து
சாப்பிடுகிறோம்
நமது மேசைகளின்
நடுவில்
குறுக்காக
அலுமாரி முளைத்திருக்கிறது
ஒரு சிகரட்டிலிருந்து
தொடங்குகிறது
நமது பகை
யாரோ
விளக்காயிருந்தார்கள்
யாரோ
கவிதையாயிருந்தார்கள்
நான்
எரிந்து கிடந்தேன்
நமது சிகரட் முறிந்து கிடக்கிறது
வெடிப்புகளால்
சாம்பல் கொட்டுகிறது.
--------------------------------------------------

Friday, July 25, 2008

கத்தி

--------------------------தீபச்செல்வன்

````````````````````````````````````````````````````
சிரிப்பின் தொடக்கத்திலேயே
நான்
அழத்தொடங்குகிறேன்
இந்த மகிழ்ச்சியின்
மிகவும் சிறிய
துளி
நளை பெரும்
துக்க அலைகளாய்
வரப்போகின்றன
நீ
புரிந்து கொண்டவைகளுக்குமாக
விட்டுக் கொடுத்தவைகளுக்குமாக
நாளை
குழப்பப்போகிறாய்
முரண்படப்போகிறாய்
உனது
முகத்தின் சிரிப்பு
வார்த்தைகள்
நாளை கத்தியாகப்போகின்றன
இப்போதைக்கு
உனது முகத்தை
காணாமலிருக்கிறேன்
எனது கனவில்
கற்கள்
வந்து விழுகின்றன
ஒரு புழுவாய்
உனது
சூட்டு வார்த்தைகளால்
நான் துடித்துப்போகிறேன்
நாம் என்றிருந்து
யாருக்காகவும்
இருட்டு முகங்களை
அணிந்தபடி
பேச வேண்டியிருக்கிறது
நாம் பேசுகிறோம்
வழமையான
நீயும் நானுமாக
கத்திகளாய் கத்திகளுக்குள்.
--------------------------------------------------

பிழைத்த கோடுகள்

-------------------------தீபச்செல்வன்

`````````````````````````````````````````````````
நான் ஏதோ
கிறுக்கியிருக்கிறேன்
இந்த கோடுகளிலிருந்து
அர்த்தம்
வெளியேறிவிட்டது
அழகிய ஓவியம்
என்பது
பிழையான கருத்தாய்
கீழே கிடக்கிறது
தேனீர்க்கோப்பைகள்
கண்களுக்கு
தெரியாத மாதிரியாய்
வெடித்தே இருந்தன
நமது
பின்னேரம் கசிந்து
வீணாகுவதை
இப்பொழுதுதான்
நான்
உணருகிறேன்
காய்ந்த
தேனீர்க் கறைக்குள்
எறும்புகளோடு அலைகின்றன
கோடுகள்
பிழைத்து விட்ட
உனதும் எனதுமான சொற்கள்.
-------------------------------------

பயங்கர கொலையாளி

--------------------------தீபச்செல்வன்

``````````````````````````````````````````````
எத்தனை முறைதான்
என்னை
கொலை செய்து போடுவாய்
நீ
ஒரு பயங்கரமான
கொலையாளி என்பதை
நான் மட்டுமே
அறிவேன்
உன்
கத்திகளால்
என்னை வெட்டி
சிதைத்து விட்டிருப்பதை
நான்
வெளியில் சொல்லாமலிருக்கிறேன்
குருதியில்
மிதக்கின்றன
மிகுந்த
பிரியத்துடனிருந்த
நமது சொற்கள்.
-----------------------------------------