அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Friday, October 10, 2008

திருப்பிக் கொடுத்த சைக்கிள்


--------------------------தீபச்செல்வன்
--------------------------------------------------
உன்னிடமிருந்த சைக்கிளின்
ஒரு திறப்பு
தொலைந்து விடுகையில்
சைக்கிளை திருப்பித் தந்திருக்கலாம்
கம்பிகள் ஒவ்வொன்றாய்
உடைந்து கொண்டிருந்தன
நீ வேறொரு சைக்கிளில்
ஏறிச் செல்லுகையில்
காற்றுப்போக
நான் நடந்து வந்துகொண்டிருந்தேன்
உன்னையும் என்னையும்
சைக்கிள் பிரித்துவிட்டது
கிடங்கில் விழுந்த
சைக்கிளை கொண்டு வந்து
நிறுத்தும்பொழுது
நீ நடந்து வந்துகொண்டிருந்தாய்
சில்லின் விளிம்புகள்
துருப்பிடித்து விட்டன
நானும் உனது சைக்கிளை
எடுக்காமல் விட்டபொழுது
உக்கிக்கொண்டிருந்தது
சைக்கிளிலும் இருவரையும் பிரிந்தது
என்னிடமிருந்த
திறப்பை தந்து விடுகிறேன்
திருத்திய சைக்கிள்
நகராமல் பிடிவாதமாயிருக்கிறது.
--------------------------------------------------------

சுவரில் அசையும் மிருகம்

--------------------------தீபச்செல்வன்
-------------------------------------------------
சுவர்களில் என்னை
மிருகம் என எழுதியிருக்கிறாய்.
நான் பூக்களை வரைந்த
சுவர்களை உடைத்து விட்டாய்.
நேற்று நீ
எனது பெயரையும் உனது பெயரையும்
எழுதியபொழுது
மேலும் சில பூக்கள் பூத்தன.
நேற்று நான் உன்னை புரியவில்லை
இன்று நீ என்னை புரியவில்லை.
சுவர்களில எழுதியிருந்ததை
அழித்து
வேறொரு வருணம் பூசிவிட்டு
மிருகம் ஒன்றை
வரைந்திருககிறாய்.
தவறுதலான ஒரு சொல்லில்
பிழைத்த புரிதலில்
அலுமாரியின ஒரு பக்கததில்
பொருட்கள் ஒதுங்கி விடுகின்றன.
எனது செருப்பு
வேறொரு அறையில் கிடக்கிறது.
படிகள் அதிகரிக்க
அறை தூரமாகிவிடுகிறது.
சுவர்கள்
நீயாகி முரண்படுகின்றன
கதிரைகள்
கீழே குதித்துவிடுகின்றன.
--------------------------------------------

பழுதடைந்த உணவு


--------------------------தீபச்செல்வன்
-----------------------------
வானொலியின் மிகப்பெரிய
ஓலியில்
தண்ணீர்த் தொட்டியில் விழுந்த
குழந்தையின் அழுகை கேட்கவில்லை.
அவன் முகத்தைக் காட்டி
பேசத் தொடங்கியபொழுது
தொலைக்காட்சி
பளபளக்கத்தொடங்கியது.
விளம்பரங்களுக்கிடையில்
வீட்டின் பொருட்க்கள் தேய்ந்து போகின்றன.
விளம்பர இடைவேளையில்
அவன் எதையோ
பேசிமுடித்த பிறகான மௌனம்
மறுபடி முகத்தை கேட்கிறது.
அலைவரிசைகளை
மாற்றிக் கொண்டிருந்த பொழுது
அவன் அறைக்கு எழுந்து சென்றிருக்க வேண்டும்.
திரைப்படத்துக்காக
தனியே அழுது தனியே சிரித்து முடித்துவிட்டு
எழுந்து செல்கையில்
அவன் தூங்கிப்போயிருந்தான்
அறை பூட்டியிருந்தது.
பழுதடைந்த உணவின் நாற்றம்
முற்றம் வரை வருகிறது.
துண்ணீர்த் தொட்டி வெறுமையாக கிடக்க
குழந்தை தேடப்படுகிறது.
---------------------------------------------

சிகரட் சூடு


--------------------------தீபச்செல்வன்
------------------------------------
கைகளை எரிக்கத்தொடங்கியபொழுது
புத்தகங்கள் தவறி
கீழே விழுந்தன
ஒரு புத்தகத்திற்கிடையில்
கிடந்து நசிகிற சிகரட்டின் தூள்கள்
வகுப்பறையில்
கொட்டிக்கிடக்கின்றன
ஒரு பியர்ப்போத்தலைப்போல
நீ உடைந்து விடுகிறாய்
போதையைப்போலவே
மிக விரைவாகவே பிரிந்து விடுகிறாய்
சிகரட்டுக்கள்
ஈரல்களையும் இதயத்தையும்
அரித்து விடலாம்
ஒவ்வொரு சிகரட்டுக்களும்
எனது கைகளை தின்றுவிடுகின்றன
நான் என்னை சூடுபோட்டுக் கொள்கிறேன்
எல்லாச் சிகரட்டுக்களும்
கையில் அணைகின்றன
விரைவாக எரிந்து முடிகிற
ஒரு சிகரட்டைப்போல
நீ விரல்களிடமிருந்து பிரிந்து விடுகிறாய்
போதையில் சத்தியோடு
வருகிறது நெருக்கத்தின் உனது ஒரு சொல்
மீண்டும் நீ நிறையப் பேசப்போகிறாய்
ஒரு பியர்ப்போத்தலோடும்
கிளாஸோடும் சிகரட்டோடும்
என்னை நெருங்கி வந்திருக்கிறாய்.
-----------------------------------------------------