அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Friday, May 30, 2008

சூரியன் ஒளிந்திருக்கும் அறை

--------------------------தீபச்செல்வன்

-------------------------------------
நண்பனே வா ஒன்றாய்
சாப்பிடுவோம்
உணவுக்கோப்பையிலிருந்து
விரிகின்றன நமது சொற்கள்.

நேற்றைய இரவு
எனதும் உனதுமான கண்ணீரில்
நனைந்து கிடந்தது
மாடியிலிருக்கும்
நமது அறையிலிருந்து
நீயும் நானும்
பருகிய தேனீர்போப்பைகள்
கீழே விழுந்துபோயின
உடைந்துவிடவில்லை
வா..படியிறங்கி
எடுத்து வருவோம்.

தெருவும் எனக்கு
பதுங்குகுழியாகியபொழுது
நமது அறையே
வானம் நிரம்பிய வெளியாகியிருந்தது
எனது நம்பிக்கையின்
முகத்தோடிருந்தாய்
நீ எனதருகில் படுத்திருந்தபோது
இரவின் பற்கள்
கரைந்து போனது.

நேற்றைய கண்ணீரில்
இன்று ஏதோ சில பூக்கள் பூத்திருக்கின்றன
நீயும் நானும் பருகாது விட்டு
சூடாறிய தேனீரில்
தாமரை மலருகிறது
எல்லாவற்றையும் பேசிய பிறகு
நெருப்பு அணைந்துவிட்டது.

நண்பனே மறுபடியும்
பேசுவோம்
காற்று ஜன்னலை திறந்து
உள் நுழைகிறது
மிகவும் ஆறுதலான இரவு வருகிறது.

என்னைப்போலவே
பயங்கர உலகத்திடமிருந்து
தப்பிய சூரியன்
நாம் தங்கியிருக்கும்
அறையில் வந்திருக்கிறது.

எந்தக்கோபமும் தெரியவில்லை
மறுபடியும்
இந்தக்கவிதையை
வா....வாசித்துப்பார்ப்போம்.
----------------------------------------------------

No comments: