அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Thursday, July 31, 2008

சாத்தான்கள்

--------------------------தீபச்செல்வன்

-------------------------------------
குருதியில் கிடக்கிற
உணவுக்கோப்பையில்
உனது
கடைசி வார்த்தை
குறை உயிருடன்
துடிக்கிறது
எல்லாமே மாறி விடுகிறது
எனது
கோப்பையில்
கிடக்கும்
சமைத்த மீன்கள்
நீந்துகின்றன
பேசாமலிருக்கிறோம்
உலகம்
இறுகிவிட
மனம் சுடலையாகிறது
நெருக்கம்
பற்றிய உரையாடல்களை
நீ
புதைத்து விடுகிறாய்
என்னால்
குழியில் புதைய முடியவில்லை
நீயும் நானும்
ஒருவருக்கொருவர்
சாத்தான்களாகிவிட்டோம்.
---------------------------------------------

Monday, July 28, 2008

முறிந்த சிகரட்

--------------------------தீபச்செல்வன்

`````````````````````````````````````````````````
நான் உன்னிடமிருந்து
எழுத முடியாத
கவிதையாய்
விளக்கின் அடியில்
எரிந்து கிடக்கிறேன்
வீட்டை
இரவு குடித்துவிட
இரண்டு மிருங்களாகி
தனித்திருந்து
சண்டை செய்கிறோம்
பழுதாகிப் போய்விட்ட
நமது
இரவுணவுகளை
வேறு வேறாய் ஒதுங்கியிருந்து
சாப்பிடுகிறோம்
நமது மேசைகளின்
நடுவில்
குறுக்காக
அலுமாரி முளைத்திருக்கிறது
ஒரு சிகரட்டிலிருந்து
தொடங்குகிறது
நமது பகை
யாரோ
விளக்காயிருந்தார்கள்
யாரோ
கவிதையாயிருந்தார்கள்
நான்
எரிந்து கிடந்தேன்
நமது சிகரட் முறிந்து கிடக்கிறது
வெடிப்புகளால்
சாம்பல் கொட்டுகிறது.
--------------------------------------------------

Friday, July 25, 2008

கத்தி

--------------------------தீபச்செல்வன்

````````````````````````````````````````````````````
சிரிப்பின் தொடக்கத்திலேயே
நான்
அழத்தொடங்குகிறேன்
இந்த மகிழ்ச்சியின்
மிகவும் சிறிய
துளி
நளை பெரும்
துக்க அலைகளாய்
வரப்போகின்றன
நீ
புரிந்து கொண்டவைகளுக்குமாக
விட்டுக் கொடுத்தவைகளுக்குமாக
நாளை
குழப்பப்போகிறாய்
முரண்படப்போகிறாய்
உனது
முகத்தின் சிரிப்பு
வார்த்தைகள்
நாளை கத்தியாகப்போகின்றன
இப்போதைக்கு
உனது முகத்தை
காணாமலிருக்கிறேன்
எனது கனவில்
கற்கள்
வந்து விழுகின்றன
ஒரு புழுவாய்
உனது
சூட்டு வார்த்தைகளால்
நான் துடித்துப்போகிறேன்
நாம் என்றிருந்து
யாருக்காகவும்
இருட்டு முகங்களை
அணிந்தபடி
பேச வேண்டியிருக்கிறது
நாம் பேசுகிறோம்
வழமையான
நீயும் நானுமாக
கத்திகளாய் கத்திகளுக்குள்.
--------------------------------------------------

பிழைத்த கோடுகள்

-------------------------தீபச்செல்வன்

`````````````````````````````````````````````````
நான் ஏதோ
கிறுக்கியிருக்கிறேன்
இந்த கோடுகளிலிருந்து
அர்த்தம்
வெளியேறிவிட்டது
அழகிய ஓவியம்
என்பது
பிழையான கருத்தாய்
கீழே கிடக்கிறது
தேனீர்க்கோப்பைகள்
கண்களுக்கு
தெரியாத மாதிரியாய்
வெடித்தே இருந்தன
நமது
பின்னேரம் கசிந்து
வீணாகுவதை
இப்பொழுதுதான்
நான்
உணருகிறேன்
காய்ந்த
தேனீர்க் கறைக்குள்
எறும்புகளோடு அலைகின்றன
கோடுகள்
பிழைத்து விட்ட
உனதும் எனதுமான சொற்கள்.
-------------------------------------

பயங்கர கொலையாளி

--------------------------தீபச்செல்வன்

``````````````````````````````````````````````
எத்தனை முறைதான்
என்னை
கொலை செய்து போடுவாய்
நீ
ஒரு பயங்கரமான
கொலையாளி என்பதை
நான் மட்டுமே
அறிவேன்
உன்
கத்திகளால்
என்னை வெட்டி
சிதைத்து விட்டிருப்பதை
நான்
வெளியில் சொல்லாமலிருக்கிறேன்
குருதியில்
மிதக்கின்றன
மிகுந்த
பிரியத்துடனிருந்த
நமது சொற்கள்.
-----------------------------------------

Monday, June 2, 2008

ஊசி

--------------------------தீபச்செல்வன்

```````````````````````````````````````````
ஊசி நகரத்தில்
ஒரு சிறுவன்
ஊசி விற்றுக்கொண்டிருந்தான்
அவனின் சட்டை
முழுக்க
உடல் முழுக்க
ஊசிகள் குத்தப்பட்டிருந்தன
ஊசி வாங்க வாங்க !!
ஊசி வாங்க வாங்க !!!
என்று
கூவியபடியிருந்தான்
ஊசியாய்
குத்தி நுழைந்து
எல்லோருக்கள்ளம்
அவனின் குரல்
ஊடுருவிச் செல்கிறது
எங்கேயோ
பள்ளிக்கூட மணி ஒலிக்கிறது
அதில்
அவனின் ஊசிக்குரல்கள்
அடிபட்டக்கிடந்தன
அவனும் ஒரு
ஊசியைப்போலிருந்தான்
அவனிடம் நான்
ஊசியை வாங்கி
சட்டையில் குத்தினேன்
எனது சட்டையெங்கும்
தெரிந்தன
அவனின் முகங்கள்.
```````````````````````````````````````````

Friday, May 30, 2008

சூரியன் ஒளிந்திருக்கும் அறை

--------------------------தீபச்செல்வன்

-------------------------------------
நண்பனே வா ஒன்றாய்
சாப்பிடுவோம்
உணவுக்கோப்பையிலிருந்து
விரிகின்றன நமது சொற்கள்.

நேற்றைய இரவு
எனதும் உனதுமான கண்ணீரில்
நனைந்து கிடந்தது
மாடியிலிருக்கும்
நமது அறையிலிருந்து
நீயும் நானும்
பருகிய தேனீர்போப்பைகள்
கீழே விழுந்துபோயின
உடைந்துவிடவில்லை
வா..படியிறங்கி
எடுத்து வருவோம்.

தெருவும் எனக்கு
பதுங்குகுழியாகியபொழுது
நமது அறையே
வானம் நிரம்பிய வெளியாகியிருந்தது
எனது நம்பிக்கையின்
முகத்தோடிருந்தாய்
நீ எனதருகில் படுத்திருந்தபோது
இரவின் பற்கள்
கரைந்து போனது.

நேற்றைய கண்ணீரில்
இன்று ஏதோ சில பூக்கள் பூத்திருக்கின்றன
நீயும் நானும் பருகாது விட்டு
சூடாறிய தேனீரில்
தாமரை மலருகிறது
எல்லாவற்றையும் பேசிய பிறகு
நெருப்பு அணைந்துவிட்டது.

நண்பனே மறுபடியும்
பேசுவோம்
காற்று ஜன்னலை திறந்து
உள் நுழைகிறது
மிகவும் ஆறுதலான இரவு வருகிறது.

என்னைப்போலவே
பயங்கர உலகத்திடமிருந்து
தப்பிய சூரியன்
நாம் தங்கியிருக்கும்
அறையில் வந்திருக்கிறது.

எந்தக்கோபமும் தெரியவில்லை
மறுபடியும்
இந்தக்கவிதையை
வா....வாசித்துப்பார்ப்போம்.
----------------------------------------------------

நிலவு தள்ளிப்போகிற இராத்திரி

--------------------------தீபச்செல்வன்

---------------------------------
எதாவது பேசிவிட்டுப்போ.

நிலவு தள்ளிப்போகிற
இராத்திரியில்
லட்சம் தனிமைகளில்
துடிக்கிறேன்
சாதுவான உனது
மௌனத்தில
ஆயிரம் முகங்கள் விரிகின்றன.

உன்னை நிரப்பி
வைத்திருந்த எனது பாடலில்
வழிகிறது
நீ இல்லாத கண்ணீர்.

நாம் பேசிக்கொண்டிருந்தபொழுது
வானம் வெளித்திருந்தது.

என்னைப்போலவே
கறுப்பாய் கிடக்கிறது வானம்
காற்றில்
மீட்கப்போன உனது
சொற்களை
தேடியலைந்து தோற்றுக்கிடக்கிறது
என் தொலைபேசி.

நிலவு குறைந்து விட்டது.

மீதியில் வடிகிறது நமது பிரிவு
நீயும் நானும்
முகங்களை மறைத்து
கடந்து போகிற
தெருவில்
நமது கால்களுக்குள்
மிதிபடுகின்றன
நமது காதலின் சொற்கள்.

முற்றி விளைந்த
இருள் மரத்தின் கொப்பில்
நான் ஏறியிருந்தபோது
உடைந்து விழுகிறது
கொப்பு
இரவுக் கிணற்றில்
கயிறாய் வந்து
உக்கி அறுகிறது உன் மௌனம்.

நிலவு இன்னும் குறைகிறது.

நீ வாசிக்காத
எனது கவிதையும்
செத்துக் கிடக்கிறது
சூரியன் இல்லாத காலையில்...........
--------------------------------------------

Monday, May 5, 2008

ஆள்களற்ற தொலைபேசி

--------------------------தீபச்செல்வன்

ஆள்களற்ற தொலைபேசி
நமது மொழியில் ஏதோ
பேசுகின்றன
நீயும் நானும் பேசுவது
கம்பிகளின் வழியாய்
பாடலாக வழிகிறது
நேற்று நீ பேசிவிட்டுப்போக
நாள் முழுக்க
கொட்டிக்கொண்டிருந்தது
உனது சொற்கள்
உனது கண்களும்கூட
கம்பிகளின் ஊடே
பேசிக்கொண்டிருந்தது
தொலைபேசியின் ஊடாக
நமது குரல்கள்
இணைந்துகிடக்கிற
காற்றின் வெளியில்
நீயும் நானும்
எங்கிருக்கிறோம்
எனது கண்கள் கரைந்து விட
உனது முகம்
நிரம்பிவிடுகிறது
நமது இருதயங்களை சிலுவையில்
அறைகிறது
நீ இல்லாத நிமிடத்தின் ஒரு துளி
நேற்று
நமது உரையாடலை
அறுத்த வேகமான காற்று
இன்று
என் தனிமைமீது
உன் சொற்களால்
பேசிக்கொண்டிருக்கிறது
காற்றில்
கலந்திருந்தன நமது சொற்கள்
நாம்
இன்னும் பேசியபடியிருப்போம்
காற்று நமதருகில் வீசுகிறது
நீ பேசாத
தொலைபேசி
கையிலிருந்து தவறி வீழ்கிறது.
-------------------------------------------------

நீ பேசாது போன பின்னேரம்

--------------------------தீபச்செல்வன்


நீ பேசாது போன பின்னேரம்
எனது சொற்கள் செத்துக் கிடந்தன
தூரத்தில் போனபிறகாவது
திரும்பிப்பார்ப்பாய்
என பார்ர்த்துக்கொண்டிருந்தேன்
உனது உருவம்
புள்ளியாய் சிறுத்து
கரைந்துவிட
எனக்குள்
நீ நிரம்பியயிருந்தாய்
என்னதான் பேசுவாய்
நான்தான்
என்ன கேட்கப்போகிறேன்
நெருங்கிவரும் பொழுது
தவிக்கிற நமது இருதயங்கள்
எப்பொழுது வெளித்தெரியும்
நீயும் நானும்
சொல்ல முடியாத உணர்வால்
துடிக்கிறதை
நிலவு பார்க்கிறது
பிரிந்ததுமில்லை
சேர்ந்ததுமில்லை
யாருக்கம் தெரியாது
நாமும் அறியாமலிருந்தோம்
ஒரு நாள் பின்னேரம்
உனது வீட்டில்
நாம் அருந்திய
தேனீர்க் கோப்பைகளினுள்
இணைந்து கிடந்தன
நமது இருதங்கள்.
---------------------------------------------------

Monday, April 7, 2008

பல்லி வசித்த அறைக்கு திரும்பியது

--------------------------தீபச்செல்வன்

அவனுக்கு சொல்லாமலே
நான் அறையை விட்டு போய்விட்டேன்
எனது புத்தகங்களையும்
உடுப்புகளையும்
வந்து தேடினான்
எனது கட்டிலுக்கு கீழாய்
பழைய செருப்பு கிடந்தது
முகம்
பார்க்கும் எனது கண்ணாடியையும்
பழைய
வானொலிப்பெட்டியையும்
அவனுக்காய்
விட்டுச்சென்றிருந்தேன்
கண்ணாடியின் மூலையில்
உடைந்த
எனது துண்டு முகம்
ஒட்டியிருந்ததாய்
யாரிடமோ சொல்லியிருந்தான்
தண்ணீர் கூஜாவில்
தனித்தமுகம்
மிதக்கக்கண்டான்
அந்த வானொலிப்பெட்டி
எப்பொழுதும்
பாடியபடியிருந்தது
அது ஒரு குளிரான அறை
நான் வேறொரு
அறைக்கு சென்றபோது
என் புத்தகங்களிற்குள்ளும்
ஆடைகளிற்குள்ளும்
வெக்கை புகுந்தது
அந்த அறையின்
பயங்கரத்தை பற்றி
நான் அவனிடம் எதுவும் சொல்லவில்லை
அதற்கு பிறகும்
அவன் என்னை கண்டு பேசினான்
நான் ஒரு நாள்
அந்த பழைய அறைக்கு
சென்று
அவனுக்கு பக்கத்தில் படுத்திருந்தேன்
அவனது அறை
வெளித்து காற்று நிரப்பியிருந்தது
ஆறுதலாய் பேசினான்
அறையின் சுவர்கள் எங்கும்
புன்னகை
பூத்து விரிந்து கிடந்தது
தனியாளாய் படிகளால்
கீழே இறங்கினேன்
பயங்கர அறை ஒன்றினுள்
சென்றடங்குவதை
அவன் கண்டான்
வெளியில் தூக்கியெறிந்த
ப்பாக்கோடு
வீதியில் நின்றேன்
அந்த இரவில் என்னை
யாரும் காணவில்லை
மீண்டும் அவன் என்னை
கூட்டிச் சென்றான்
அந்த அறைக்கு
மாடியின் படிகள் பூத்திருந்தன
------------------------
(எனது அறை நண்பன் விமலேஷிற்கு)

-----------------------------------------

Thursday, April 3, 2008

சிகரட் நண்பன்

--------------------------தீபச்செல்வன்

வாகனங்கள் புகைத்தபபடி
போய்க்கொண்டிருந்தது
எனக்கு
ஒரு சிகரட் வேண்டும்
என்றான் நவராஜ்
அல்லது
என்னிடம் இருபது ரூபா இருக்கிறது
வா
ஒரு சிகரட் புகைப்போம் என்றான்.

கடையின் மேல் மாடியிலிருந்து
நானும் அவனும்
சிகரட்டை குடித்துக்கொண்டிருந்தோம்
கடையின் சமையல் பகுதியும்
புகைத்தபடியிருந்தது

அந்த மாடிக்கு செல்லும்
படிகள்
சாம்பல் படிகளாகியிருந்தன
ஒரு சிகரட்டை புகைப்பதற்காக
என்னை நகர் முழுவதும்
தேடிக்கொண்டு வந்தான்.

ஒரு நாள் இரவு
பெட்டிக்கடை ஒன்றிற்கு
பக்கத்தில்
நானும் அவனும்
ஒரு சிகரட்டை மாறிமாறி இழுத்தோம்.

அவனின் வீட்டில்
முழுநாளும் தங்கியிருந்தபோது
அம்மாவுக்கு தெரியாமல்
மாமரத்தில் ஏறி சிகரட்டை இரகசியமாய் குடித்தோம்
மாம்பூக்களில் கலந்திருந்தன சாம்பல்.

நான் உதிர்ந்த சாம்பலுக்காய்
வருத்தப்பட்டு தேடினேன்
விழுந்திருந்த ஓவியங்களை
ரசித்துவிட்டிருக்க மிதிபடும்
சாம்பலை கைகளால் மூடினேன்
எப்போழுதுக்குமாய் எனது தோள்களை
இறுகப்பிடித்திருந்தான்.

சைக்கிளின் முன்னாலிருந்தான்
பொக்கற்றில் கிடக்கும்
ஒரு சிகரட்டோடு
அந்த சைக்கிள் நகர மறுத்தது.

நாளைக்கு நீ போகாதே என்றான்
என்றாவது நான்
போயாகவேண்டியிருந்தது
அன்று முழுக்க அவனின்
தேளில் நகராமல் சாய்ந்திருந்தேன்.

சாம்பல் கிண்ணத்தில் நிறைந்து
கிடந்தன
சாம்பல்களோடு
சிகரட்டின் அடித்துண்டுகள்
சிகரட்டில் கலந்திருந்த நமது சொற்கள்
கிண்ணத்தில் நிரம்பிக்கிடந்தது.

நமது வாடிக்கையான தேனீர்கடையின்
மொட்டைமாடியில்
நம்மோடு இரண்டு சிகரட்டுகள்
புகைந்தன
அவனின் முகம் கரைந்தபடியிருந்தது

நான் நிலவைப் பார்த்தேன்
அதுவும்
ஒரு சிகரட்டை புகைக்க
கொட்டிக்கொண்டிருந்தது சாம்பல்
நமது நகரமெங்கும்.....
-------------------------------------------------
(எனது உயிர்த்தேழன் நவராஜிற்காக..)
--------------------------------------------------------

செலவு

-------------------------தீபச்செல்வன்

மூன்று நூறு ரூபாய்
தாள்களின்
முகத்தோடு பியர்
சிரித்துக்கொண்டிருந்தது
கிளாசில்
நிரம்பியிருந்த
வீண்செலவை
குடித்து விட்டு திமிரடைந்தேன்.

கலைச்செலவு
இருபத்தைந்து ரூபா
மதியமும் இரவும்
தொண்ணுறு ரூபா
ஜயாயிரம் ரூபாவில்
மீதி
படிப்புபகரணங்களுக்கு என்று
அவன் சிரித்தபடி கூறினான்.

மாலைத் தேனீரை தவிர்க்கப்போறேன் என்றான்.

அம்மாவின் காசுகள்
வியர்வைகள் என்றான்
எனக்கு வந்த
இரண்டாயிரம் ரூபாவில்
பல ஆயிரம்
அம்மாவின் களைப்புகள் கேட்டன.

அந்த சின்னவன் சிரித்தான்
எனது முகத்தில்
ஓங்கி அறைந்தது
அந்த பொறுப்புடைய வாழ்க்கைச் சிரிப்பு.

கிளாஸ் உடைய
அதற்குள்
எனது உடைந்த முகம்
நொருங்கிக் கொட்டியது...
----------------------------------------------------

Thursday, March 27, 2008

நிலவு தேடிய குழந்தை

--------------------------தீபச்செல்வன்

வாகனங்களுக்கிடையில்
குழந்தையின்
அழுகையும் சிரிப்பும்
தாயின் பாடலும்
நசிந்து விடுகிறது
நசிக்கப்பட்ட
கொஞ்ச சோறுகளுடன்
தாய் நிலவை
தேடிக்கொண்டிருந்தாள்
உயர வளர்ந்து
வானத்தை மூடிய
கட்டிடங்கள்
எரிந்து புகைவிட்டன
தலையில்
தூக்கி வைக்கப்பட்ட
ஜந்து மாடிகளையும்
இறக்கி
எறிந்து விட்டு
மொட்டைமாடியில்
அரிதாய் திரிகிற
காற்றை பிடித்து
குடித்துக்கொண்டிருந்தேன்
நிலவு வானத்தில்
ஒரு மூலையில்
ஒட்டி ஒளிந்திருந்தது
தாய் நிலவை
தேடிக் களைக்கிறாள்
சேரிக்குடியிலிருந்து
அவள்
என்னைக்காட்டி
குழந்தையின் வாயில்
சோற்றை திணிக்கிறாள்.
----------------------------------------------

இரவு நதி

--------------------------தீபச்செல்வன்

இரவை மிருகம்
என்ற
நண்பனிடமிருந்து
நான் பிரிந்து விட்டேன்
இரவு நதியாகி பரவுகிறது
படிகள் இல்லாத
மொட்டை மாடியில்
விரிந்து கிடக்கிறது
வெக்கையடிக்கும்
எனது
பாட புத்தகங்கள்
அறையை பூட்டிவிட்டு போகிறான்
தோழன்
எனதறைக்கு
காதலி ஏறிவர
படிகள் இல்லை என்றாள்
இரவு அறைக்கு
ஏறி வருகிறது
இரவை ஒரு கோப்பையில்
நிரப்பி வைத்து
பார்த்துக்கொண்டிருந்தேன்
மின்குமிழ் அழுதது
படியிறங்கும்
என்னை தின்பதற்காய்
கீழே
ஒரு மிருகம் திரிகிறது.
--------------------------------------

பறவை மிருகமாகியது

--------------------------தீபச்செல்வன்

எனது தனிமையில்
துயருமும் இருந்தது
நிம்மதியும் இருந்தது
நான் எப்படி
சொல்லிவிட
கூட்டத்திற்கும்
தனிமைக்கும்
உங்களுக்கும்
எனக்கும் இடையில்
உறவு தேவையென்பதை
எனது நண்பனும்
நானும்
மிருகமாகி
தனித்திருக்கிறோம்
நகங்களை
கூர்மையாக்கியபபடி
பறவையின் கனவிலிருக்க
மிருகங்களாகியதை
நானும் அவனும்
யாருக்கும் சொல்லவில்லை
செட்டையை கழற்றி விட்டு
நழுவி நகர்கிற
மிருகமாகி
நானும் அவனும்
பிரிந்து போகிறோம்
நானும் அவனும்
ஒரு கூட்டமாகியிருந்ததை
யார் கவனித்தார்கள்
இந்த மிருகமுகங்களை
அணிந்ததையும் கூட
யார் கவனித்தார்கள்.....
---------------------------------

தாடிமுகம்

--------------------------தீபச்செல்வன்

----------------------------------------------
ஏன் தாடி வளர்த்திருக்கிறாய்
என்று கேட்கிறாள்
எனது தோழி
எப்போதாவது
தாடி வழித்த என் முகத்தை
கண்டிருக்கிறாயா
என்று கேட்டேன்
இல்லை என்கிறாள்
தானாய் வளர்கிற
எனது தாடியை
குழந்தைகளின்
முடியைப்போல
நான்
வருடிக்கொண்டிருந்தேன்
தாடிக்குள் நானும்
எனது முகமும் மறைந்திருக்கிறோமா?
அது ஒரு சோலையாக
நான் அதற்குள் உலவித்திரிகிறேனா?
நான் முகம்
மழித்தபோதும்
தாடி
முகத்தில்
ஒட்டியிருக்கிறது
முகம் மழித்தபடி
வகுப்பறையில் இருந்தேன்
அவள் தாடி பற்றி
பேசாமலிருந்தாள்
நான்கு நாட்கள் போக
ஏன் தாடி வழிக்க வில்லை
என்றாள்
நான்கு நாட்களுக்கு முன்பு
எனது தாடியை கண்டாயா
என்று கேட்டேன்
அப்பொழுதும்
நீ தாடி வளர்த்திருந்தாய்
என்றாள்
நான் தாடியாகியிருந்தேன்..
-----------------------------------

பூனையும்நாயும் நிரம்பியவீடு

--------------------------தீபச்செல்வன்


`````````````````````````````````````````````````````
என் சப்பாட்டிற்குஅருகில்
என்பூனை காவலிருக்கிறது
சாப்பாட்டின் மிகுந்தவாசனையில்
உடைகள் வேகமாக கழறுகின்றன.

வீட்டிற்கு வெளியே இப்பொழுதெல்லாம்
மனிதர்களை சந்திக்கமுடிவதில்லை
நடமாடித்திரிபவர்களிடம்
உண்மை முகங்கள்
மருங்கியிருக்கின்றன
வீடு வரும்பொழுதெல்லாம்
அந்த மனிதர்களின்
பொய்முகங்கள் பின்தொடர்ந்து
துன்புறுத்துகின்றன.

பூனை கால்களை உரசும் பொழுதெல்லாம்
எல்லா வலிகளும் அகலுகின்றன
நிம்மதியை கெடுக்கிற
ஒலிகளின் மத்தியில்
பூனையின் குரல்
சங்கீதமாய் ஒலிபரப்பாகிறது.

எங்கள் வீட்டில்
பூனைக்கும் நாய்க்கும் கூட
நல்லநெருக்கம் இருக்கிறது
அவைகளின் தோற்றம் விகாரப்பட்டு
நெருக்கத்தின் வடிவமாய்
சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன.
பூனையும் நாயும்
எப்பொழுதும் ஞாபகமாயிருக்கின்றன.

வீட்டில் நெருக்கமும் ஆறுதலும் பரவுகிறது
அமைதியும் ஒழுங்கும் நிலவுகிறது
பூனையும் நாயும் கூடிய எனதுவீடு
எப்பொழுதும்
எல்லாவற்றுக்குமாக காத்திருக்கிறது.
-----------------------------------------------------------

அறையை விட்டுப் போன பல்லி

--------------------------தீபச்செல்வன்


அறையில் வாலருந்த
ஒற்றைப் பல்லி
அசையாது கிடக்கிறது
வாலைத் தொலைத்த
பல்லியின் மீது
விளக்கு உடைந்து விழுகிறது
இரண்டு பல்லிகள்
ஒருநாள் புணர்ந்தபடி
நமது படுக்கைகளின் மீது
விழுந்தோடின
நீயும் நானும்
பல்லிகள் புணர்வதையும்
நெருங்கி நகர்வதையும்
அதன் சுவர் வெளிகளையும்
பார்த்துக்கொண்டிருந்தோம்
நமது காதலிகளுடனான
புணர்தலின் நெருக்கத்தை
அதனிடத்தில் கற்றுக்கொண்டோம்
கண்களின் மோகத்தையும்
வாயின் தாகத்தையம்
நீ ரசித்துக்கொண்டிருந்தாய்
இரண்டு தோழமை பல்லிகளாகி
அதன் நெருக்கத்தை
பார்த்துக்கொண்டிருந்தோம்
பல்லிகளின் நெருக்கம்
நிறைந்த அறையில்
இப்பொழுது
துரோகம் நிரம்பியிருக்கிறது
மூடியிருந்த அறை
உடைந்துவிட
நான் வெளியேறுகிறேன்
உனது பொருட்கள் நிரம்பிய அறையில்
எனது கனவு மிதிபடுகிறது
பாதிக்கனவில்
பாதிதூக்கத்தில்
நிலவு விரட்டப்பட்ட
இராத்திரியில்
அந்த பல்லிகளையும் என்னையும்
நீ துரத்தியிருக்கிறாய்
எனது கட்டிலையும்
பாதி சாப்பிட்ட தேனீரையும்
தூக்கி வெளியில் போட்டிருக்கிறாய்
பொருட்கள் இல்லாமல்
வெளித்திருக்கிற
எனது அறையில்
கதவுகள் திறந்திருக்க
நான் விழுந்திருக்கிறேன்
கூடவே வந்திருக்கிறது
வாலருந்த ஒற்றைப் பல்லியும்.
----------------------------------------

சிறுவர்களின் வினோத வேடங்கள்

---------------தீபச்செல்வன்

```````````````````````````````````````````````````````
சிறுவர்களின் விளையாட்டு
மைதானத்தில்
நிறைய முகமூடிகள் கிடந்தன.

வினோதங்கள்
கூடுதலாக இருக்க
தான் என்ன வேடம் அணிவது
என்று கேட்கிறான்
எனது பிள்ளை.

நான் நிறைய உருவங்களை
பாhத்திருக்கிறேன்
என் பிள்ளைக்கு
எந்த வேடத்தின்
முகமூடியை காட்டவேண்டும்.

எந்த குணத்தை
தெரிவு செய்யவேண்டும்.

அவன் உருவங்களின்
கோதுகளையும்
உள்ளீடுகளையும்
அறியாது பார்க்கிறான்.
முகமூடிகளின்
பின் வாசனை தெரியாதவன்.

அவைகள் அவனிடத்தில்
கவர்ச்சியை ஏற்படுத்தியபடியிருந்தன.

பிள்ளைகளின் உயிரில்
அங்கிருந்த முகமூடிகள் எல்லாம்
மிக கூடுதலான
மழலை பெற்ற
உருவங்களாக தெரிந்தன.

கோரத்திற்குரிய முகமூடிகளின்
குணங்கள் எங்கோ மறைய
பிஞ்சு ஊடகத்தில்
முகமூடிகள் சாந்தமாயிருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில்
நிறைய உருவங்களை பார்க்கிறான்
விளையாட்டான வேடங்கள்
என்பதை அவன் மறக்கிறான்.

எல்லா முகமூடிகளையும்
வாசிக்கிறான்
ஏதோ ஒரு முகமூடியை
எடுத்துக்கொண்டு
வீட்டிற்கு வருகிறான்
நான் எதையும் பார்க்காதிருந்தேன்.
------------------------------------------------

குறியுடன் வரும் இரவு

---------------தீபச்செல்வன்


அடையிலிருக்கும் கோழியை
வலிந்து
சேவல் புணர்கிறது
இன்னும் சில சேவல்கள்
முதுகைக் கிழித்து
குறியை புதைக்கின்றன
சேவலின்
கால்களுக்கிடையில்
கோழி
நசிந்து கிடக்கிறது
இருட்டில் இருட்டுடன்
புணர்வதைப்போலிருக்கிறது
இரவோடு
முகம் கரைகிறது
வெறும் குறிகளும்
முலைகளும்
நிறைந்து தெரிகிற
நினைவில்
குறி புதைந்து விடுகிறது
சொற்களில்லை
நீளமில்லை
உடல்கள் ஒட்டிக்கொள்ளாது
சேவலைப்போல
குறி
எழும்பி விழுகிறது
குறியை புதைத்து விடுகிற
இரவு
பயங்கரமாய் வருகிறது
பகல் குருடாகிப்போக
இரவானதும்
நெருங்கிவிடுகிறோம்
குறிகள் புதைந்து விடுகிறது.
-----------------------------------------

Wednesday, March 26, 2008

பாம்பு நெளியும் அறை

--------------------------தீபச்செல்வன்


சைக்கிளில் பாம்புகள்
நெளிந்து வழிகிறது
இன்னும் கயிறு
பாம்பாகவே தெரிகிறது
இருட்டை நிறைத்திருந்த
பாம்புகள்
பகலிலும் நெளிகிறது
சொற்களிலும்
புன்னகையிளலும்
நீ பாம்பை நெளிய விடுகிறாய்
பாம்புகளாய் காண்கிறாய்
கழுத்தில் பாம்பு
அசைய
கயிற்றில் விஷம் வடிகிறது
மரங்களையும்
வீதிகளையும்
நீ பாம்புகள் என்கிறாய்
புல்வெளிகளை
பாம்புமேடு என்கிறாய்
மேசையில் வந்துகிடந்த
பாம்பு மெல்ல
அசைந்து அசைந்து
அறையை விட்டு
வெளியேறுவதுபோல
நீ அறையை விட்டுபோகிறாய்
குட்டிப்பாம்புகளைப்போல
உனது சொற்களும்
உனது கோபங்களும்
கொட்டிக்கொண்டிருக்கிறது
பாம்புக்கயிற்றால்
நீ கட்டி வைத்திருந்த
பிடியும் முடிச்சும்
அறுந்துவிட
நான் வெளியில் விழுகிறேன்
----------------------------------

முட்களுக்காக முளைத்திருக்கும் கால்கள்

-----------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
வழியில் செறிவாக கிடக்கிறது
முட்பொறிகள்
தூரம் சுருங்கி சுருங்கி
நீள்கின்றன
பயணங்களின் குறிப்புகளை
யாரும் மீள வாசிப்பதாயில்லை.
நான் கால்களாகவே
தனித்திருக்கிறேன்.

வண்டிகளில் எந்த புரிதலுமில்லை.
சக்கரங்களின் வட்டம்
சதுரமாகிப்போக
நகர்வுகள் முடங்கிவிடுகின்றன
யாருடைய தோல்களிற்கும்
எனது கைகள் எட்டவில்லை.

மாலை நேரங்கள்
கொலை செய்யப்பட
எனது காலைகளில்
சூரியன்கள் உதிக்காமல்
வழி நீண்டு செல்கிறது.

ஏதோ ஒன்று வெற்றிடமாயிருக்கிறது
பகிர வேண்டிய விடங்கள்
நிறைய இருக்க
விருந்தில்லங்களுக்கு தூரமாகவே
வண்டிகள் திரும்பிவிடுகின்றன.

எந்த வழியும் முட்களின்றி இருப்பதில்லை.
எல்லாமுகங்களிலும்
ஒரு நாள் யதார்த்தம் வெளிக்கும்.
எனது கால்கள்
முட்களுக்காகவே முளைத்திருக்கலாம்.
-------------------------------------------------------

மேசைக்கு கீழே புகைந்த சிகரட்

--------------------------தீபச்செல்வன்

மின்சாரம் நிரபப்பட்ட
மீன் தொட்டியில்
துடிக்கிற
மீன்களைப்போல
உனக்கும் எனக்கும் இடையில்
மேசைவிளக்கு துடிக்கிறது
உடைந்த கதிரையை
கோதுமை மாப்பசையினால்
ஒட்டிவிட்டு
என்னை இருக்கவைத்து
பேசிக்கொண்டிருக்க
உனது குரூர வார்தைகளுடன்
கதிரையும் நானும்
உடைந்து விழுகிறோம்
கடல் கரையில்
நீயும் நானும்
குடித்தவிட்டுப் போட்ட
பியர் போத்தல்கள்
பிசுங்கானாகி
காலை கிழித்து விட்டிருக்கிறது
நீயும் நானுமிருந்து
பேசியகடல் மணல் கரையில்
குருதி கொட்டியிருக்கிறது
உனது சொற்களும்
பிசுங்கானைப்போல
என்னை
கிழித்தப் போட்டிருக்கிறது
முகம் பார்த்த கண்ணாடி
கைதவறி விழுந்து
உடைவதைப்போல
உனது சைக்கிளில் இருந்து
நான் விலகி விழுகிறேன்
நீ ஒளித்து வைத்து
புகைத்த
சிகரட்டின்
சாம்பல் தணலாகி காலை
சுடுகிறது
மேசைக்கு கீழிருந்து
சிகரட்டை
புகைக்கிறாய்
இனி
உனக்கும் எனக்கும்
இடையில்
கயிறுகளும் இல்லை
பாலமும் இல்லை
படிகளும் இல்லை
துரோகம் மட்டும்
சுற்றி வளைத்திருக்கிறது.
----------------------------------------

நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்.

--------------------------தீபச்செல்வன்


--------------------------------------------
ஜீன்ஸ்க்குள் கிடந்த
நோக்கியாபோன் அலருகிறது.

பத்துரூபாய்க்கு வாங்கியருந்திய
முந்நூறுமில்லி சோடாவை
எழுபத்தைந்து ரூபாய்க்கு
வாங்கி அருந்திக்கொண்டிருந்தேன்.

இருபது ரூபாய்க்கு
வாங்கிய சிகரட்
வாயில்
கொலுந்து விட்டெறிகிறது
இன்னும் ஜந்து ரூபாவால்
அதிகரித்தபோதும்
வாய் எரியாமல் இருக்கிறது.

தெருவில் சிகரட்டை
சப்பியபடி
பியர்போத்தலை
தூக்கி அருந்தியபடி திரிய முடிகிறது

எப்போதாவது வரும்
நெட்வேர்க்கில்
வியர்வையை காசுகளை
குடிக்கும்
நொக்கியாபோன் திரும்ப
பேரூந்தில் அலருகிறது
மேலதிக காசில் வாங்கும்
ரேசர் கோட் கார்ட்டுக்காக.

யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கலாம்
யாராவது அழைப்பார்கள்
யாரையாவது அழைக்கலாம்
எதாவது பேசலாம்.

பக்கத்திலிருக்கும் தோழனுடன்
பேசவேண்டியவை பேசாமல்
புரியவேண்டியவை புரியால் இருக்கிறது
அவனின் கேள்விகளும்
உரையாடலும்
வெறுமையில் அடிபட்டுக் கிடக்கின்றன


கசை குடித்துவிட்டு
பசிகளின் முன்னால்
நொக்கியாபோன் காலை நீட்டி படுத்திருக்கிறது
சொற்களும் உரையாடல்களும்
கம்பிகளிலிருந்து
வெளிறே எங்கும் சூன்யம் நிறைந்தது
-----------------------------------------------------------------------------